திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான, இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர் டாக்டர்.மு.கருணாநிதி அவர்கள் நாகை மாவட்டம் திருக்குவளையில் 1924ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதி முத்துவேலர் - அஞ்சுகம் தம்பதிக்கு மகனாக பிறந்தார். கருணாநிதியின் இயற்பெயர் தட்சிணாமூர்த்தி.
தனது பள்ளிப் பருவத்தில் இருந்தே நாடகம், கலை, கவிதை, இலக்கியம், தமிழ் ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். தனது பேச்சாற்றல், எழுத்தாற்றல் மற்றும் சமயோசித திறமையால் சிறுவயதிலேயே மிகப்பெரும் தலைவர்களின் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பெற்று, பிரபலமானவர். இளம்வயதிலிருந்தே பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு தன் அரசியல் ஆர்வத்தையும், தனக்கான தனி இடத்தையும் தக்கவைத்தவர். அரசியல்வாதியாக மட்டுமின்றி எழுத்தாளர், வசனகர்த்தாபி, கவிஞர், பத்திரிக்கையாளர் என பல முகங்களை கொண்டவர் கருணாநிதி. பராசக்தி, பூம்புகார், மனோகரா உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். தனக்கு நடிப்பிலும் ஆர்வம் இருந்ததையடுத்து மேடை நாடங்களில் நடிக்கவும் செய்தார். இருப்பினும் அவரின் நடிப்பை விட அவரின் வசனங்களும், அவர் பயன்படுத்திட வார்த்தைகளும் தான் கருணாநிதியை உயர பறக்க வைத்தது எனலாம். இவரின் கதை வசனத்தில் வெளியான படங்கள் மிகப்பெரும் வெற்றிகளை பெற்று இன்றும் அழிக்க முடியா மறக்க முடியா காவியங்களாக ஓங்கி நிற்கிறது. இவரின் அசாத்திய திறமையால் திரைத்துறையில் தனக்கென ஓர் முத்திரை பதித்தவர் கருணாநிதி. பல மேடை நாடகங்களுக்கும் கதை வசனம் எழுதி இயக்கியும் இருக்கிறார்.
அந்த வகையில், அவர் கதை வசனம் எழுதிய நாடகம்தான் தூக்கு மேடை. இந்த நாடகத்தில் பாண்டியன் எனும் வேடத்தில் தானே நடிக்கவும் செய்தார். முற்றிலும் பகுத்தறிவு பிரச்சாரமாக அமைந்தது இந்த நாடகம். மேலும், இந்த நாடக விளம்பரத்தில் 'அறிஞர் கருணாநிதி' என்று எழுதப்பட்டிருந்தது. 'அறிஞர்' பட்டம் அண்ணாவுக்கு மட்டுமே பொருந்தும். அதை எடுத்தால்தான் தான் தொடர்ந்து நடிப்பேன் என்று திட்டவட்டமாக கூறினார். எனவே, 'கலைஞர் கருணாநிதி' என்று விளம்பரம் செய்தார் எம்ஆர் ராதா. இதைத்தொடர்ந்து மனோகரா படத்தில் முதல் முறையாக கலைஞர் கருணாநிதி என்று பெயர் பயன்படுத்தப்பட்டது.
13 முறை சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட கருணாநிதி ஒருமுறை கூட தோல்வியை சந்தித்ததில்லை. 5 முறை தமிழக முதல்வராக அரியணை ஏறியவர், தன் வாழ்நாளில் தோல்வி என்ற சொல்லே இல்ல அகராதியாய் வாழ்ந்தவர். தன்னை புதைக்க ஆறடி இடம் தேவையென்றாலும் அதையும் தான் போட்டியிட்டு வென்றே வாங்குவேன் என்பது போல், பல சட்ட சிக்கல் இருந்த போதிலும் அனைத்தையும் முறியடித்து, இரவலாய் வாங்கி வந்த இதயத்தை தன் அண்ணாவிடம் இறுதியாய் கொடுத்து அவர் கால் அருகிலே அமைதியாய் இளைப்பாற சென்றுவிட்டார். பல அரசியல் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு தான் ஒரு சிறந்த பொதுலக தலைவராய், குடும்ப தலைவராய், தமிழுக்கான உண்மையான போராளியாய், நண்பராய், எல்லாவற்றிற்கும் மேல் சிறந்த மனிதராய் வாழ்ந்து சென்றிருக்கிறார். பல திட்டங்களின் மூலம் ஏழை எளிய மக்கள் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்திருந்தாலும் இவர் கொண்டு வந்த முதல் பட்டதாரி திட்டம் இல்லையென்றால் பல குடும்பங்கள் இன்றும் பொறியியல் படிப்பை ஓரம் நின்று வேடிக்கை பார்க்கும் நிலையில் தான் இருந்திருக்கக் கூடும்.
தனது முதல் மேடை பேச்சானது அவர் 8ம் வகுப்பு படிக்கும்போது நட்பு எனும் தலைப்பில் பேசினார். அன்று முதல் அவர் இயற்கை எய்திய கடைசி நொடி வரை நட்பை தன் உயிரினும் மேலாக மதித்தவர் கருணாநிதி என்பது குறிப்பிடக்கூடியது.
தன்னை கடலிலே தூக்கிப்போட்டாலும் கட்டுமரமாக மிதப்பேன் என்று எப்பொழுதும் கூறுபவர், இனியாவது கடற்கரை காற்றை ரசித்துக்கொண்டு, தன் அண்ணாவுடன் கதை பேசிக்கொண்டு அமைதியான நீண்ட நெடும் துயில் கொள்ளட்டும்.
அன்னாரின் ஆன்மா அமைதியுற வேண்டுவோம்...