மொழி என்பது நம் எண்ணங்களையும் கருத்துகளையும் பரிமாறிக்கொள்ளத் தானே அன்று, அதை வைத்து பேதம் பிரிக்கவோ, வேறு பல தேவையற்ற செயல்களுக்கோ இல்லை என்பதை நாம் அறிவோம். இருப்பினும் அந்த மொழியை வைத்து பல எண்ணற்ற வகையில் ஏமாற்றிக்கொண்டிருக்கும் கூட்டமும் உண்டு (அரசியலுக்கு அப்பாற்பட்டு). நான் சமீபத்தில் என் பணிக்காக பெங்களூர் வந்தேன். மொழி தெரியா இடத்தில் நான் சந்தித்த சில இன்னல்களையும் முந்தைய பதிவில் வெளிப்படுத்தியிருந்தேன். இருப்பினும் இவ்வாறு மொழி தெரியா இடங்களில் சிக்கிக்கொண்டு ஏகப்பட்ட ஏமாற்றங்களை சந்திக்கும் மக்கள் நம்மில் பலர் உள்ளனர். அப்படி நான் சமீபத்தில் தெரிந்துகொண்ட நிகழ்வு என்னை மிகவும் சிந்திக்க வைத்துவிட்டது.
என் நெருங்கிய நண்பரின் நண்பர் ஒருவர் (அருண்), தமிழ்நாட்டில் இருந்து பெங்களூர் வருகிறார். அவருக்கு தமிழும் ஆங்கிலமும் தான் தெரியும். எலக்ட்ரானிக் சிட்டியில் பணிபுரியும் அந்த நண்பர் தூக்க கலக்கத்தில் சரியான இடத்தில் இறங்க தவறி, சிறிது அதாவது அவர் இறங்க வேண்டிய இடத்திலிருந்து 2-3 கி.மீ தூரம் தள்ளி இறங்குகிறார். அப்பொழுது அதிகாலை 4 மணி இருக்கும். அந்நேரத்தில் பேருந்து வசதியும் இல்லை. எந்நேரமும் உதவி செய்ய தயாராக காத்திருக்கும் கூகுள் நண்பரின் உதவியுடன் தான் சென்றடைய வேண்டிய தூரம் 2கி.மீ தூரத்தில் உள்ளது என்பதை அறிந்து கொண்டு ஆட்டோவில் சென்று விடலாம் என்று முடிவு செய்து ஆட்டோவை அழைக்கிறார் அருண். ஆட்டோவில் அந்த ஆட்டோ ஓட்டுனரின் நண்பரும் இருக்கிறார். ஆட்டோ ஓட்டுநர் அதிகாலை நேரம் என்பதால் மீட்டர் காண்பிக்கும் தொகையின் இரண்டு மடங்கு தர வேண்டும் என்று கேட்க, இரண்டு கி.மீ தானே என்று ஒப்புக்கொண்டு தன் பயணத்தை தொடர்கிறார் அருண். ஆட்டோ ஓட்டுநர் சந்து சந்தாக ஓட்டிச் செல்லவே அருணுக்கு சந்தேகம் வளுக்கிறது. ஆட்டோ ஓட்டுனரிடம் கேட்க, அவரோ முன்னுக்கு பின் முரணாக பதில் கூறுவதை உணர்ந்து தான் இறங்கிக்கொள்வதாக கூறுகிறார். இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது, தான் பயணித்து வந்த 10 நிமிட தூரத்திற்கு 4 கி.மீ பயணித்ததாய் மீட்டர் பெட்டி காட்டுகிறது. அருணோ கூகுள் அண்ணாச்சியின் உதவியால் ஆட்டோ ஓட்டுனரின் சதியை புரிந்துகொள்ள முற்படுகிறார். இறங்குவதாய் கூறியதும் இரவு நேரம் இரண்டு மடங்கு பணம் என்றும், 350+350 தரவேண்டும் என மிரட்டுவதை போல் உணர்ந்த அருண், அதிகாலை வேளையிலே மொழி புரியா ஊரிலே வேறு வழியின்றி அவர்கள் கேட்ட தொகையை (1*500, 2*100ரூ) கொடுத்து வேக வேகமாக நடக்க தொடங்கினார். சிறுது தூரம் சென்றதும் அந்த ஆட்டோவில் இருந்த ஓட்டுனரின் நண்பர் இவரை பின் தொடர்ந்து வேகமாக வருவதை உணர்ந்து என்ன என்று கேட்டார், அதற்கு, நீங்கள் 500 ரூ என்று நினைத்து 50ரூ கொடுத்துள்ளீர்கள் பாருங்க என்று கூறி 50 ரூ நோட்டை நீட்டினார். இவரும் முடிந்தவரை வாக்குவாதம் செய்து வேறு வழியின்றி இன்னொரு 500 ரூபாயை கொடுத்துவிட்டு இந்த 50 ரூபாயை வாங்கி வைத்துக்கொண்டு நடந்தார். இதை அவர் சொல்ல கேட்கும்பொழுது சற்று நகைச்சுவையாகத் தான் தோன்றியது. எளிதில் பலரை நம்பி ஏமாறும் என்னால் கூட இவர் சொன்ன நிகழ்வை நம்ப முடியவில்லை. அவர் வார்த்தைகளின் தடுமாற்றமும், தொண்டையின் அவ்வப்போது அடைப்பும், வெளியே வரலாமா வேண்டாமா என கட்டளைக்காய் காத்திருக்கும் கண்ணீரும் தான் அவரின் வேதனை வெளிப்படுத்தியது. பாவம், மொழி தெரியலனு இப்புடிலாமா ஏமாத்துவாங்கனு தோணுச்சு. ஒரு முறை ஆட்டோவில் என் பர்ஸை தொலைத்துவிட்டு வீடு வந்து சோகத்தில் அமர்ந்திருந்தேன். சரியாக 10 நிமிடத்திற்குள் என் பர்ஸை அந்த ஆட்டோ ஓட்டுநரே என் வீட்டில் வந்து கொடுத்துவிட்டு பர்சலாம் இப்புடி அசால்ட்டா வைக்காத தம்பி னு சொல்லி, நன்றி கூறி நான் குடுத்த காசையும் வாங்க மறுத்து, ஆட்டோ காச தான் அப்பயே குடுத்துட்டயேப்பா ன்னு சொன்ன ஆட்டோக்கார அண்ணன்களை பாத்த எனக்கு சத்தியமா இது ரொம்ப கேவலமா தெரிஞ்சிது. இப்போ நமக்கு தெரிஞ்சி இவரு ஏமாந்திருக்காரு, ஆனா நமக்கு தெரியாம எவ்ளோ பேரு எப்புடி எப்புடியோ ஏமாந்துருப்பாங்க. அருண் வயிறு எறிஞ்சி கொடுத்த அந்த காசு கண்டிப்பா அந்த ஆட்டோ ஓட்டுனருக்கு நல்லது பண்ணிருக்காது. இப்படியெல்லாம் வசனம் பேசுனாலும், மொழி தெரியல அதனால இவனை சுலபமா ஏமாத்திடலாம் னு எண்ணம் வர என்ன காரணம் அப்டிங்குறது தான் முக்கியம்னு எனக்கு தோணுது. இதே செயலை கண்டிப்பா அந்த ஊரு காரங்க கிட்ட அவனால பண்ண முடியாது. இப்படிப்பட்ட பிரிவினைக்கு பின்னாடியும் ஒரு பெரிய அரசியல் இருப்பதை உணர முடிகிறது. என்ன இருந்தாலும் மனிதர்களாகிய நம்மை மீறி அரசியல் ஒன்றும் செய்திட முடியாது என பல இடத்தில் நாம் உணர்ந்திருக்கிறோம். இருப்பினும் இவ்வாறான சூழ்நிலைகளில் மனிதநேயம் என்பது அறவே இல்லாமல் போவது தான் வேதனை.
Monday, July 23, 2018
மொழி தெரியாதவரை குறிவைக்கும் கொள்ளை கும்பல்... உஷார் பதிவு...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment