Friday, January 11, 2019

இனி Egmore, Triplicane, Chetpet, Chromepet...என எதுவும் கிடையாது - அதிரடி முடிவு (Jan,2019)

           
                           தமிழ்நாட்டில் நம் தாய் மொழியான தமிழ் மெல்ல மெல்ல அழிந்து வருவதாய் பலதரப்பட்ட கருத்துக்களும் விமர்சனங்களும் எச்சரிக்கைகளும் தொடர்ச்சியாக எழுந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஆங்கிலத்தில் உள்ள ஊர், நகர், தெருப் பெயர்களை தமிழுக்கு மாற்றத் திட்டமிட்டு நடவடிக்கையில் இறங்கியுள்ளது தமிழக அரசு. இதன் முதல் கட்டமாக சென்னையில் உள்ள 18 ஊர்களின் பெயர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது.





அண்மையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், தமிழகத்தில் உள்ள முக்கியமான பல ஊர்கள், மாவட்ட தலைநகரங்களின் பெயர்கள் இனி மாற்றப்படும் என்று அறிவித்திருந்தார். அதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுவிட்டதாக கூறியிருந்த அவர், விரைவில் அது தொடர்பான ஆணைகளும் பிறப்பிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இதுபற்றிய தீர்க்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னையில் உள்ள பெரும்பாலான பகுதிகளின் பெயர்கள் ஆங்கிலத்திலேயே பயன்படுத்தப்படுகிறது. சான்றாக, குரோம்பேட், எக்மோர், ட்ரிப்ளிகேன், சேத்பேட் போன்ற ஊர்களின் பெயர் ஆங்கிலத்திலேயே அதிகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இனி, அது போன்ற ஆங்கிலத்தில் பயன்படுத்தும் பெயர்களை அகற்றி தமிழ் பெயர்களாகவே, அதாவது குரோம்பேட்டை, எழும்பூர், திருவல்லிக்கேணி, சேத்துப்பட்டு என்று மட்டுமே அழைக்கப்படும் எழுதப்படும் எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, தற்போது பெயர் மாற்றம் தொடர்பான பணிக்காக 32 மாவட்டங்களிலும் உயர்மட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு மாற்றம் செய்யவேண்டிய ஊர்களின் பெயர்களையும், இனி எவ்வாறு அந்த ஊர்களின் பெயர்கள் அழைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. அதன்படி, தற்போது 3 ஆயிரம் ஊர்களின் பெயர்கள், தெருக்கள் மாற்றப்பட இருக்கின்றன. அதற்கான நடவடிக்கைகளையும் தமிழக அரசு தொடங்கி உள்ளது.

மேலும், திருச்சி என்பது திருச்சிராப்பள்ளி என்றும், டுட்டிகொரின் என்பது தூத்துக்குடி என்றும் மாற்றப்படுகிறது.

இந்த செயலானது பெரும்பாலான மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

1 comment: