Thursday, January 10, 2019

’என் வாழ்க்கை’ புத்தகத்தில், எதிர்பாரா புதியதொரு பக்கம்... A New unexpected page in book 'My Life' (ஜன.10, 2019)

             பெங்களூருக்கு வந்து ஏறக்குறைய 6 மாதங்கள் முடிந்தது. இருந்தும் ஒவ்வொரு நாளும் புதுப்புது அனுபவங்களைக் கற்றுக்கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறது. மொழியில் விழிபிதுங்கி நின்றது முதல், உணவு, கலாச்சாரம் என அனைத்திலும் மாறுபட்ட ஒரு பழக்கத்தை உணர்ந்தேன். இருப்பினும் என்னை வெகுவாக பாதித்தது இந்த ஊரின் வானிலை தான்... அதை பற்றி பேச ஆரம்பித்தால் அது முடியா கடலாய் நீளும்... சரி விஷயத்துக்கு வரேன்...

பெங்களூரு வந்து என்னில் ஏற்படுத்திக்கொண்டு சில மாற்றங்களில் ஜிம் செல்வது முக்கியமான ஒன்று. விளையாட்டாய் ஆரம்பித்த ஒன்று, இன்றும் விடாமுயற்சியாய் போய் கொண்டிருக்கிறது... தினமும் மாலை வேளையில் தான் ஜிம்முக்கு போய்கொண்டிருந்தேன், சில காரணங்களால் காலை நேரத்தில் போகலாம் என நேற்று எண்ணி அதை இன்றே செயல்படுத்திவிட்டேன்... ஆனால் பெங்களூரு குளிரில் அர்த்தராத்திரி 6 மணிக்கு எழுந்திருப்பது என்பது அவ்வளவு சாமானிய செயல் அல்ல... ஏனெனில் இங்கு வந்த நாள் முதல் என் மொபைலில் தினமும் காலை 6.30 முதல் 7.45 வரை ஒவ்வொரு கால் மணிநேரத்திற்கும் அலாரம் அடிக்கும் ஆனால் காலை 8 மணிக்கு என் வடஇந்திய ரூம்மேட் போடும் புரியாத பாடல்களால் மட்டுமே என்னை எழுப்ப முடியும்... இருப்பினும் ஏதோ ஒரு தைரியத்தில் முடிவு செய்துவிட்டேன்... இதை நேற்றிரவே என் ரூம் மேட்டிடம் (தமிழ் பையன்) கூறினேன்... அவனோ ஜிம் நிறுத்துறதுக்கு இது ஒரு காரணமா என்று சிரித்து விட்டு தூங்கிவிட்டோம்... இருப்பினும் என் மனதில் காலை எழ வேண்டும் என்ற எண்ணம் இருந்துகொண்டே இருந்தாலும் இந்த ஊர் குளிர், தாலாட்டு பாடுவதிலிருந்து மட்டும் மீளமுடியவில்லை...

அலாரம் அடித்து எழுந்து விட்டேன்,முதல் ஆச்சரியம்... அடுத்ததாக மறுநிமிடமே என் ஜிம் மேட் கால் செய்து விட்டார்... அவரும் எழுந்து விட்டாரே என்ற இரண்டாம் ஆச்சரியம்... தூக்கம் ஒரு பக்கம், மனதில் குமுறல் ஒரு பக்கம்... வேறு வழியின்றி கிளம்பி விட்டேன்... வண்டியை ஸ்டார்ட் செய்தேன் கிளம்பவில்லை... லட்சுமி ஸ்டார்ட் ஆகிடு ஸ்டார்ட் ஆகிடுன்னு நெனச்சிக்கிட்டு அழுத்தினேன் ஒரு வழியாய் கிளம்பியது....
அந்த 10 நிமிட பனி பயணத்தில் எவ்வளவு சம்பவங்கள்...

சாரல் மழை கண்டிருக்கிறேன், முதல் முறையாய் சாரல் பனி...
பனியினால் கூட கண்ணீர் வர வழைக்க முடியும் என உணர்த்தியது...
சாலையில் முற்றிலும் பனிமூட்டம்... எதிரில் வரும் வாகனங்கள் ஏதும் தெரியவில்லை.... ஏன்னா எதிரில் ஒரு வாகனமும் இல்லை... இந்த குளிரில் எவனாவது வெளில வருவானா??? நான் ஏன் டா நடு ராத்திரியில சுடுகாட்டுக்கு போகனும்னு சொல்லும் வடிவேலுவின் வசனம் தான் நினைவில் தோன்றியது... இருப்பினும் ஒரு ஜோடி, சாலை ஓரத்தில் ஸ்வெட்டர் அணிந்து நடுங்கியபடி நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்... அதை பார்க்கும்போது ஏதோ இரு பென்குயின்கள் அணைத்தவாறே நடப்பது போன்றே தோன்றியது.... ஆனால் இதன் மூலம் என் உடல் நல்ல நிலைக்கு வருகிறதோ இல்லை, வேறொரு நல்ல விஷயம் நடந்திருக்கிறது... என் அம்மா பல முறை சொல்லியும், என் நண்பர்கள் கண்டித்தும், என்னுடன் பயணிபவர்கள் பீதியில் புலம்பியும் வேகமாக வண்டி ஓட்டுவதை குறைத்தது இல்லை... ஆனால் என்னாலே நம்ப முடியவில்லை இந்த குளிரில் வண்டியை 40இல் கூட செலுத்த இயலவில்லை... இது கண்டிப்பா பலருக்கும் சந்தோசமாக இருக்கும் என நினைக்கிறேன்... குறிப்பாக தினமும் இருமுறையாவது போன் செய்யும் அம்மாவிடம் எங்கு போனாலும் பஸ்ல தான் போறேன் என்று நான் சொல்லும் பொய்யை பொய் என்று அறிந்தும் அப்படியாப்பா என நம்பியாவாறு பேசும் என் அம்மாவுக்கு உண்மையிலே சந்தோசமாக இருக்கும்... எப்படியோ முதல் நாள் அர்த்தராத்திரி 6.50 ஜிம் நுழைந்து குளிரில் இருந்து விடுபட்டு இதமான வெப்பத்தை உணர்ந்தேன்... முதல் நாள் காலை ஜிம் வெற்றிகராமாக முடிந்தது...

இதை பற்றி மட்டும் தான் எழுத எண்ணினேன், ஆனால் வரும்வழியில் மேலும் ஒரு சுவாரசியம் காத்திருந்தது...

ஜிம் முடித்துவிட்டு ஜிம் மேட் ரமேஷை அவர் ரூமில் விட்டுவிட்டு என் ரூம் நோக்கி விரைந்தேன்... வழியில் ஒரு வடமாநில நண்பர் வேகமாக ஓடிக்கொண்டிருந்தார்... சரி நாம ஜிம்முக்கு போய் ஓடுறோம் இவரு ரோட்டுல ஓடுறாரு போலனு மத்தவங்களை மாதிரி தான் நானும் யோசிச்சேன்... ஆனா bag மாட்டிக்கிட்டு ஹெட்போன்லாம் போட்டுகிட்டு படுவேகமாக ஓடுவதை பார்த்து சற்று முன்பு பார்த்தேன். பேருந்து ஒன்று பஸ் ஸ்டாப்பிலிருந்து கிளம்புவதை பார்த்து தான் அவர் ஓடுகிறார் என்பதை உணர்ந்தேன்... ஆனால் பேருந்து கிளம்பிவிட்டது... விரக்தியில் தன் வேகத்தை குறைத்த அவரிடம் என்ன ப்ரோ, அந்த பஸ்ஸ பிடிக்கணுமா என ஆங்கிலத்தில் கேட்டேன், ஆமாம் அந்த பஸ்ல போனா தான் கரெக்டா ஆபீஸ் போக முடியும் அடுத்த பஸ் எப்போ வரும்னு தெரியல வந்தாலும் கூட்டமா இருக்கும்னு சொன்னாரு... நான் அந்த வழியில் போக வேண்டிய அவசியம் இல்லை என்றாலும், வாங்க நானும் அந்த வழில தான் போறேன், அடுத்த ஸ்டாப்பில் பிடிச்சிடலாம் என சொல்லி அவரை ஏற்றிக்கொண்டு பஸ்ல ஏத்திவிட்டு மீண்டும் அதே வழியில் பின்னோக்கி வந்து ரூம் சென்றடைந்தேன்... பஸ்ல ஏறியதும் எனைப் பாரத்து ஹிந்தி கலந்த ஆங்கிலத்தில் நன்றி என்பதைக்கூறி விடைபெற்ற அந்த நண்பனின் புன்சிரிப்புடன் இனிதே துவங்குகிறது இந்நாள்...

9 comments:

  1. Yoh Ramesh, error kavanikkalayaa.. அங்கிலத்தில்

    ReplyDelete
    Replies
    1. ஐயயோ... மன்னிச்ச்ச்ச்சுசுசுசு... மாற்றிவிட்டேன்...

      Delete
  2. மிக சிறப்பு. ஜிம்முக்கு போய் கும்முனு இருந்தா லைஃப் ஜம்முனு இருக்கும்.😄🙌

    ReplyDelete
  3. Bikeae oota theriatham aana pona 100 la tha povaram ....

    ReplyDelete
  4. ❄️ பனியில ஜிம் போனா முடி கொட்டும்னு சொன்னாங்க சீனி.. 😀

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா... அதெல்லாம் இருக்கவன் கவலை படலாம், நான் ஏன் கவலை படனும் 😀😛😛

      Delete