Monday, January 14, 2019

"உன்னை இப்போ பாக்கணும்..." - அவள் முகம் பார்த்திடாத முதல் பொங்கல்😥😥😥... (பொங்கல் 2019)

பொங்கல்... தமிழனாய் பிறந்த ஒவ்வொருவனும் இந்த நாளை நினைத்தாலே உள்ளுக்குள்ள ஒரு உற்சாகம் இருக்கும்... ஸ்கூல் பசங்களுக்கு தொடர்ச்சியா 4-5 நாள் லீவ், காலேஜ் பசங்களுக்கு தங்களோட குடும்பத்தோடயும் ஸ்கூல் நண்பர்கள், ஊர் பசங்கன்னு எல்லாரையும் ஒன்னா பாக்கலாம்னு ஒரு சந்தோசம், வயசானவங்களுக்கு வெளியூர்ல வேலை செய்யிற தங்களோட பசங்களையும் பேர பசங்களையும் பாக்க போறோம் என்ற சந்தோஷம்... இது மாதிரி ஒவ்வொரு கால கட்டத்துல இருக்கவங்களுக்கும் ஒரு விதமான சந்தோசத்தை கொடுத்து மகிழ்ச்சியை பொங்க வைக்குற நாள் தான் நம்ம பொங்கல்...

என்ன தான் காலைல 6 மணிக்கு அலாரம் வச்சாலும் அம்மா எழுந்திரு எழுந்திரு சொல்லி அரை மணிநேரம் கழிச்சி பொலம்பிகிட்டே எழுந்தா கொறஞ்சது 7 30 மணியாவது இருக்கும்... அம்மா வீட்டலாம் கழுவி விட்டு, சாமி படங்களலாம் தொடச்சி பூ போட்டு வச்சி சாமியரையை அலங்கறிச்சிறுபாங்க...

சுடுதண்ணி கொதிக்கிது எவ்ளோ நேரம் தான் தூங்குவ... எழுந்திருன்னு அம்மா கத்த ஆரம்பிக்கும்போதே சுதாரிசிக்கிட்டு எழுந்துடனும் இல்லனா அவ்ளோ தான்... சரி போய் அந்த எண்ணெயை எடுத்துட்டு வா தேச்சு விடறேன்னு அம்மா சொல்லும்போது தான் ஞாபகத்துக்கு வரும், நேத்து நைட்டே அவ்ளோ சொன்னாங்க எண்ணெய் வாங்கிட்டு வந்து வைன்னு ஆனா வாங்கலனு... அதுக்கு வேற திட்டு விழும்னு அவசர அவசரமா வண்டிய எடுத்துட்டு போய் கடையில எண்ணெய் வாங்கி அப்டியே கடைக்கார அண்ணனுக்கு பொங்கல் வாழ்த்துக்கள் சொல்லிட்டு வீட்டிக்கு பறந்து வரணும்...

நம்ம வீட்ல சும்மா இருந்தாலும் அக்கம்பக்கத்துல இருக்க பொடிசுங்களாள தான் நமக்கு அதிக டோஸ் கிடைக்கும்... பாரு குட்டி பசங்க காலைல எழுந்து குளிச்சி புது ட்ரஸ் போட்டு எவ்ளோ அழகா வெடி வெடிக்குதுங்க... உனக்கும் தான் 7 கழுதை வயசு ஆகுது இன்னும் சோம்பேறித்தனம் னு... அப்போ தான் செம்ம காண்டாவும்... என் தூக்கத்தை கெடுத்ததே அதுங்க போட்ட வெடியாள தான்... நம்ம தெருவுல ஒரு 6-7 குட்டிசுங்க இருக்குங்க... தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான், கார்த்திகை தீபம் னு எது வந்தாலும் வெடி தான்... ஆனா நான் ஸ்கூல் முடிக்கும்போதே அதுங்க குட்டிசுங்களா தான் இருந்துச்சிங்க ... சரி குழந்தைங்க, வளர வளர சரி ஆகிடும்னு பாத்தா இப்போ நான் வேலைக்கு போய் 3 வருஷம் ஆகுது (ஸ்கூல் முடிச்சி ஏறக்குறைய 9 வருஷங்கள் ஆகிடிச்சி) இன்னும் வெடி வெடிக்குற பழக்கம் மட்டும் மாறல...😭😭😭

சரினு அம்மா எண்ணெய் தேய்க்க ஆரமிச்சங்கனா அப்டியே உடம்பில இருந்து ஆவியா பறக்கும்... அதுக்கும் திட்டு தான்... பாரு எண்ணெய் தேச்சு குளினு சொன்னா எங்க கேக்குற... இப்போ பாரு எவ்ளோ சூடு உடம்புலனு... அது கூட பரவால்ல... தலையில எண்ணெய் தேய்க்கும்போது தான் உயிரே போய்டும்... வலியால இல்ல... முடியால...ஆனா எனக்கு தெரிஞ்சி கடந்த 7 வருஷமா ஒரே வசனம் தான் சொல்லிட்டு இருப்பேன்... நீ இப்புடி தேச்சினா அடுத்து வருஷம் தேய்க்கிறதுக்கு மண்டைல முடி இருக்காது னு... நல்ல வேல இந்த வருஷமும் அந்த வசனம் சொல்றதுக்கு முடி இருக்கு... ஹா ஹா ஹா...

குளிச்சு முடிச்சி வந்தா சொர்கமா தூக்கம் வரும், ஆனா நம்ம பசங்க வந்துடுவாங்க, வேட்டி சட்டையை போட்டுக்கிட்டு ஊர் சுத்த கெளம்பிடுவேன்... பல பண்டிகையை கொண்டாடுனாலும் பொங்கள்னா தனி தான்...

இதுல சில விஷயங்களை ஒவ்வொரு வருஷமும் கொஞ்சம் கொஞ்சமா இழந்துகிட்டே வந்தேன், ஆனா இந்த வருஷம் மொத்தமும் போனதாய் உணர்கிறேன்... ஏன்னா பொங்கலுக்கு ஊருக்கே போக முடியல... பணி நிமித்தமாக... இப்போதான் அம்மாவை ரொம்பவே மிஸ் பன்றேன்... கூட இருக்கும்போது பெருசா வெளிப்படுத்திக்கல, அதற்கான அவசியமும் வந்ததாய் தோனல... ஆனா இப்போ... வெளிப்படுத்த முடியாமல் பொலம்பிக்கொண்டிக்கிருக்கிறேன்...
உன்னை இப்போ பாக்கணும்😥😥...

இதை எழுத தொடங்கும்போது கண்டெண்ட் (content) மட்டும் தான் இருந்தது, எங்க ஆரமிக்கணும், எதெல்லாம் குறிப்பிடனும், எப்புடிலாம் எழுதனும்னு ஆனா இப்போ முடிக்கிற நேரத்துல என்னையறியாம கண்ணீர்... (அட இது நம்ம ஸ்கிரிப்ட்லே இல்லையே)...

தாயால் வளர்க்கப்பட்டு சகோதரிகளின் செல்ல தம்பியாய் வளர்ந்த என்னை போன்றவர்கள் தங்களின் வாழ்வில் சந்திக்கும் மிகப்பெரும் வலி, அடி இதைவிட வேறு என்ன இருந்திட முடியும்... #பாசம்...

குடும்பத்துடன் நான் இருந்திடாத முதல் மற்றும் கடைசி பொங்கல் இதுவாகவே இருக்கவேண்டும் என்ற தீர்க்க முடிவை எடுத்துள்ளேன்...

இருப்பினும் இந்த பொங்கலுக்கு ஊருக்கு வரவில்லை என்றதும் சில நண்பர்கள் விளையாட்டாய் கூறிய சில வார்த்தைகள் என்னை ஆழமாய் பாதித்துள்ளது... பொங்கலுக்கு லீவ் இல்லன்னு யாராவது சொல்லுவாங்களா... அப்படி சொன்னா என்ன LOP (Loss of pay)ல வரலாமே என்று... இங்க ஒரு சின்ன தெளிவு குடுக்கணும்னு நெனைக்கிறேன், நான் பொங்கலுக்கு வராதது பணி நிமித்தமாக மட்டுமே தவிர பண நிமித்தமாக இல்லை. தமிழுக்காய் வேலை செய்யும் 8 பேர் கொண்ட தமிழர்களின் அணிக்கு, தமிழர் திருநாளாம் பொங்கல் அன்று விடுமுறை இல்லை என்பது வெட்கி தலை குனிய வேண்டிய செயலாகவே பார்க்கிறேன்... அவன் அவனுக்கு வந்தா தான தெரியும்... இதை அவர்கள் பார்த்தாலும், என்ன இதுக்குலாம் இவ்ளோ பொங்குறான், ஹி இஸ் ஜஸ்ட் பர்ஸ்டிங் அவுட் ஆஃப் இமோஷன்னு தான் நெனைப்பங்க... ஆனா பொங்கல் இஸ் அக்ச்சுவலி அன் இமோஷன்னு அவங்களுக்கு புரியுமானு தெரியல... நாம கொண்டாடாத, என்னவென்று அர்த்தம் கூட தெரியாத வடஇந்திய பண்டிகைக்கெல்லாம் விடுமுறை உண்டு... தமிழர்கள் தானே என்ற அவர்களின் எண்ணம் இவர்களுக்கும் வந்துவிட்டதோ என்றே எண்ணத்தோன்றுகிறது...
முதல் முறையாய் பொங்கலுக்கு அம்மாவுடன் இல்லாததை எண்ணி குமுறுகிறேன்... வேற என்ன பண்றது குரங்குக்கு வாக்கப்பட்டா மரத்துக்கு மரம் தாவி தான ஆகணும்...

இதுக்கு இன்னொரு காரணமும் சொல்லலாம், நான் பெங்களூர்ல இருக்கேன்... என்ன தான் சிங்கம் காட்டுக்கே ராஜாவா இருந்தாலும், அதோட குகைல இருந்தா தான அதுக்கு பெருமை...

குடும்பத்தோடு இத்திருநாளை இனிதே கொண்டாடும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள், சந்தோசம் பொங்கட்டும்...

என் உணர்வுகளுக்கு வார்த்தைகள் மூலம் உயிர்கொடுத்த தமிழ் மொழிக்கு நன்றி... 🙏🙏🙏

Friday, January 11, 2019

இனி Egmore, Triplicane, Chetpet, Chromepet...என எதுவும் கிடையாது - அதிரடி முடிவு (Jan,2019)

           
                           தமிழ்நாட்டில் நம் தாய் மொழியான தமிழ் மெல்ல மெல்ல அழிந்து வருவதாய் பலதரப்பட்ட கருத்துக்களும் விமர்சனங்களும் எச்சரிக்கைகளும் தொடர்ச்சியாக எழுந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஆங்கிலத்தில் உள்ள ஊர், நகர், தெருப் பெயர்களை தமிழுக்கு மாற்றத் திட்டமிட்டு நடவடிக்கையில் இறங்கியுள்ளது தமிழக அரசு. இதன் முதல் கட்டமாக சென்னையில் உள்ள 18 ஊர்களின் பெயர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது.





அண்மையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், தமிழகத்தில் உள்ள முக்கியமான பல ஊர்கள், மாவட்ட தலைநகரங்களின் பெயர்கள் இனி மாற்றப்படும் என்று அறிவித்திருந்தார். அதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுவிட்டதாக கூறியிருந்த அவர், விரைவில் அது தொடர்பான ஆணைகளும் பிறப்பிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இதுபற்றிய தீர்க்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னையில் உள்ள பெரும்பாலான பகுதிகளின் பெயர்கள் ஆங்கிலத்திலேயே பயன்படுத்தப்படுகிறது. சான்றாக, குரோம்பேட், எக்மோர், ட்ரிப்ளிகேன், சேத்பேட் போன்ற ஊர்களின் பெயர் ஆங்கிலத்திலேயே அதிகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இனி, அது போன்ற ஆங்கிலத்தில் பயன்படுத்தும் பெயர்களை அகற்றி தமிழ் பெயர்களாகவே, அதாவது குரோம்பேட்டை, எழும்பூர், திருவல்லிக்கேணி, சேத்துப்பட்டு என்று மட்டுமே அழைக்கப்படும் எழுதப்படும் எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, தற்போது பெயர் மாற்றம் தொடர்பான பணிக்காக 32 மாவட்டங்களிலும் உயர்மட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு மாற்றம் செய்யவேண்டிய ஊர்களின் பெயர்களையும், இனி எவ்வாறு அந்த ஊர்களின் பெயர்கள் அழைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. அதன்படி, தற்போது 3 ஆயிரம் ஊர்களின் பெயர்கள், தெருக்கள் மாற்றப்பட இருக்கின்றன. அதற்கான நடவடிக்கைகளையும் தமிழக அரசு தொடங்கி உள்ளது.

மேலும், திருச்சி என்பது திருச்சிராப்பள்ளி என்றும், டுட்டிகொரின் என்பது தூத்துக்குடி என்றும் மாற்றப்படுகிறது.

இந்த செயலானது பெரும்பாலான மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Thursday, January 10, 2019

’என் வாழ்க்கை’ புத்தகத்தில், எதிர்பாரா புதியதொரு பக்கம்... A New unexpected page in book 'My Life' (ஜன.10, 2019)

             பெங்களூருக்கு வந்து ஏறக்குறைய 6 மாதங்கள் முடிந்தது. இருந்தும் ஒவ்வொரு நாளும் புதுப்புது அனுபவங்களைக் கற்றுக்கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறது. மொழியில் விழிபிதுங்கி நின்றது முதல், உணவு, கலாச்சாரம் என அனைத்திலும் மாறுபட்ட ஒரு பழக்கத்தை உணர்ந்தேன். இருப்பினும் என்னை வெகுவாக பாதித்தது இந்த ஊரின் வானிலை தான்... அதை பற்றி பேச ஆரம்பித்தால் அது முடியா கடலாய் நீளும்... சரி விஷயத்துக்கு வரேன்...

பெங்களூரு வந்து என்னில் ஏற்படுத்திக்கொண்டு சில மாற்றங்களில் ஜிம் செல்வது முக்கியமான ஒன்று. விளையாட்டாய் ஆரம்பித்த ஒன்று, இன்றும் விடாமுயற்சியாய் போய் கொண்டிருக்கிறது... தினமும் மாலை வேளையில் தான் ஜிம்முக்கு போய்கொண்டிருந்தேன், சில காரணங்களால் காலை நேரத்தில் போகலாம் என நேற்று எண்ணி அதை இன்றே செயல்படுத்திவிட்டேன்... ஆனால் பெங்களூரு குளிரில் அர்த்தராத்திரி 6 மணிக்கு எழுந்திருப்பது என்பது அவ்வளவு சாமானிய செயல் அல்ல... ஏனெனில் இங்கு வந்த நாள் முதல் என் மொபைலில் தினமும் காலை 6.30 முதல் 7.45 வரை ஒவ்வொரு கால் மணிநேரத்திற்கும் அலாரம் அடிக்கும் ஆனால் காலை 8 மணிக்கு என் வடஇந்திய ரூம்மேட் போடும் புரியாத பாடல்களால் மட்டுமே என்னை எழுப்ப முடியும்... இருப்பினும் ஏதோ ஒரு தைரியத்தில் முடிவு செய்துவிட்டேன்... இதை நேற்றிரவே என் ரூம் மேட்டிடம் (தமிழ் பையன்) கூறினேன்... அவனோ ஜிம் நிறுத்துறதுக்கு இது ஒரு காரணமா என்று சிரித்து விட்டு தூங்கிவிட்டோம்... இருப்பினும் என் மனதில் காலை எழ வேண்டும் என்ற எண்ணம் இருந்துகொண்டே இருந்தாலும் இந்த ஊர் குளிர், தாலாட்டு பாடுவதிலிருந்து மட்டும் மீளமுடியவில்லை...

அலாரம் அடித்து எழுந்து விட்டேன்,முதல் ஆச்சரியம்... அடுத்ததாக மறுநிமிடமே என் ஜிம் மேட் கால் செய்து விட்டார்... அவரும் எழுந்து விட்டாரே என்ற இரண்டாம் ஆச்சரியம்... தூக்கம் ஒரு பக்கம், மனதில் குமுறல் ஒரு பக்கம்... வேறு வழியின்றி கிளம்பி விட்டேன்... வண்டியை ஸ்டார்ட் செய்தேன் கிளம்பவில்லை... லட்சுமி ஸ்டார்ட் ஆகிடு ஸ்டார்ட் ஆகிடுன்னு நெனச்சிக்கிட்டு அழுத்தினேன் ஒரு வழியாய் கிளம்பியது....
அந்த 10 நிமிட பனி பயணத்தில் எவ்வளவு சம்பவங்கள்...

சாரல் மழை கண்டிருக்கிறேன், முதல் முறையாய் சாரல் பனி...
பனியினால் கூட கண்ணீர் வர வழைக்க முடியும் என உணர்த்தியது...
சாலையில் முற்றிலும் பனிமூட்டம்... எதிரில் வரும் வாகனங்கள் ஏதும் தெரியவில்லை.... ஏன்னா எதிரில் ஒரு வாகனமும் இல்லை... இந்த குளிரில் எவனாவது வெளில வருவானா??? நான் ஏன் டா நடு ராத்திரியில சுடுகாட்டுக்கு போகனும்னு சொல்லும் வடிவேலுவின் வசனம் தான் நினைவில் தோன்றியது... இருப்பினும் ஒரு ஜோடி, சாலை ஓரத்தில் ஸ்வெட்டர் அணிந்து நடுங்கியபடி நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்... அதை பார்க்கும்போது ஏதோ இரு பென்குயின்கள் அணைத்தவாறே நடப்பது போன்றே தோன்றியது.... ஆனால் இதன் மூலம் என் உடல் நல்ல நிலைக்கு வருகிறதோ இல்லை, வேறொரு நல்ல விஷயம் நடந்திருக்கிறது... என் அம்மா பல முறை சொல்லியும், என் நண்பர்கள் கண்டித்தும், என்னுடன் பயணிபவர்கள் பீதியில் புலம்பியும் வேகமாக வண்டி ஓட்டுவதை குறைத்தது இல்லை... ஆனால் என்னாலே நம்ப முடியவில்லை இந்த குளிரில் வண்டியை 40இல் கூட செலுத்த இயலவில்லை... இது கண்டிப்பா பலருக்கும் சந்தோசமாக இருக்கும் என நினைக்கிறேன்... குறிப்பாக தினமும் இருமுறையாவது போன் செய்யும் அம்மாவிடம் எங்கு போனாலும் பஸ்ல தான் போறேன் என்று நான் சொல்லும் பொய்யை பொய் என்று அறிந்தும் அப்படியாப்பா என நம்பியாவாறு பேசும் என் அம்மாவுக்கு உண்மையிலே சந்தோசமாக இருக்கும்... எப்படியோ முதல் நாள் அர்த்தராத்திரி 6.50 ஜிம் நுழைந்து குளிரில் இருந்து விடுபட்டு இதமான வெப்பத்தை உணர்ந்தேன்... முதல் நாள் காலை ஜிம் வெற்றிகராமாக முடிந்தது...

இதை பற்றி மட்டும் தான் எழுத எண்ணினேன், ஆனால் வரும்வழியில் மேலும் ஒரு சுவாரசியம் காத்திருந்தது...

ஜிம் முடித்துவிட்டு ஜிம் மேட் ரமேஷை அவர் ரூமில் விட்டுவிட்டு என் ரூம் நோக்கி விரைந்தேன்... வழியில் ஒரு வடமாநில நண்பர் வேகமாக ஓடிக்கொண்டிருந்தார்... சரி நாம ஜிம்முக்கு போய் ஓடுறோம் இவரு ரோட்டுல ஓடுறாரு போலனு மத்தவங்களை மாதிரி தான் நானும் யோசிச்சேன்... ஆனா bag மாட்டிக்கிட்டு ஹெட்போன்லாம் போட்டுகிட்டு படுவேகமாக ஓடுவதை பார்த்து சற்று முன்பு பார்த்தேன். பேருந்து ஒன்று பஸ் ஸ்டாப்பிலிருந்து கிளம்புவதை பார்த்து தான் அவர் ஓடுகிறார் என்பதை உணர்ந்தேன்... ஆனால் பேருந்து கிளம்பிவிட்டது... விரக்தியில் தன் வேகத்தை குறைத்த அவரிடம் என்ன ப்ரோ, அந்த பஸ்ஸ பிடிக்கணுமா என ஆங்கிலத்தில் கேட்டேன், ஆமாம் அந்த பஸ்ல போனா தான் கரெக்டா ஆபீஸ் போக முடியும் அடுத்த பஸ் எப்போ வரும்னு தெரியல வந்தாலும் கூட்டமா இருக்கும்னு சொன்னாரு... நான் அந்த வழியில் போக வேண்டிய அவசியம் இல்லை என்றாலும், வாங்க நானும் அந்த வழில தான் போறேன், அடுத்த ஸ்டாப்பில் பிடிச்சிடலாம் என சொல்லி அவரை ஏற்றிக்கொண்டு பஸ்ல ஏத்திவிட்டு மீண்டும் அதே வழியில் பின்னோக்கி வந்து ரூம் சென்றடைந்தேன்... பஸ்ல ஏறியதும் எனைப் பாரத்து ஹிந்தி கலந்த ஆங்கிலத்தில் நன்றி என்பதைக்கூறி விடைபெற்ற அந்த நண்பனின் புன்சிரிப்புடன் இனிதே துவங்குகிறது இந்நாள்...

Tuesday, January 8, 2019

கள்ளக்குறிச்சி - தனி மாவட்டம் ஆனது ... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு...

விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்து சட்டப்பேரவையில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி இன்று உத்தரவிட்டள்ளாா்.

தமிழகத்தில் தற்போது 32 மாவட்டங்கள் உள்ளன. இந்நிலையில் 33வது மாவட்டமாக விழுப்புரம் மாவட்டம் பிரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமாக, விழுப்புரம் மாவட்டம் பெரிதாக இருப்பதாகவும், இதன் காரணமாக அரசு பணிகளை எளிதில் பெறமுடியவில்லை என்றும் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் ஏற்படும் சிரமங்களை இது குறைக்கும் எனவும் இதன் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் இருந்த கள்ளக்குறிச்சியை அப்பகுதி மக்களின் கோாிக்கைக்கு இணங்க, பிரிக்க முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளார். அதோட, இந்த கோாிக்கையை அப்பகுதி மக்களுடன் அம்மாவட்ட சட்டப்பேரவை உறுப்பினா்களும் முன்வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தின் இறுதி நாளான இன்று முதல்வா் எடப்பாடி பழனிசாமி ஆளுநரின் உரைக்கு நன்றி தொிவித்து பேசினாா். அப்போது விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவிப்பதாகவும் தொிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் 11 சட்டப்பேரவை, 2 மக்களவை தொகுதிகள் இருந்தன. இந்நிலையில் தமிழகத்தின் 33வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உருவாக்கப்படுகிறது. விரைவில் இந்த மாவட்டத்திற்கு புதிய ஆட்சித் தலைவா் நியமிக்கப்படுவாா் என்றும் எதி்ாபாா்க்கப்படுகிறது.

முதல்வரின் அறிவிப்பைத் தொடா்ந்து சட்டப்பேரவை உறுப்பினா்கள் முதல்வருக்கு நன்றி தொிவித்தனா். மேலும் கள்ளக்குறிச்சியில் அ.தி.மு.க.வினா் உட்பட பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டாடி வருகின்றனர். மேலும், இது அரசியல் காரணத்திற்காக எடுக்கப்பட்ட முடிவு என்றும் ஒருசிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதை பற்றிய உங்கள் கருத்தை பதியிடலாமே...

Sunday, January 6, 2019

'ஜிப்ஸி' - உலகளவில் ஒதுக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டு அகதிகளாய் மாற்றப்பட்ட ஓர் இந்திய இனம்...

         
'கோ' படத்துக்கு பிறகு நடிகர் ஜீவாவுக்கு சொல்ற அளவுக்கு பெரிய வெற்றி படம் ஏதும் அமையல. அதன் பிறகு சில படங்கள் ஓடுனாலும் மிகப்பெரிய வெற்றி கிடைக்கல. இப்படி இருக்கும்போது 'குக்கூ', 'ஜோக்கர்' ஆகிய படங்களைத் இயக்குன ராஜூமுருகன் அடுத்ததா நடிகர் ஜீவா நடாஷா சிங் நடிப்பில, 'ஜிப்ஸி' என்ற படத்தை இயக்கிட்டு இருக்காரு. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் ஆகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இதனால ஜிப்ஸி அப்டினா என்னன்னு தேடி பாக்கும்போது தான் பல திடுக்கிடும் ஆச்சரியமும் அதிர்ச்சியும் கலந்த விஷயங்கள் தெரியவந்துருக்கு.



தனக்குன்னு ஒரு இருப்பிடம் இல்லாமல் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நாடற்றுத் திரிகிற ஒரு இனத்தைச் சேர்ந்தர்கள் தான் இந்த ஜிப்ஸினு சொல்லக்ககூடிய மக்கள்.


யூதர்களுக்கு அடுத்தபடியாக பல்லாயிரக் கணக்கில் ஹிட்லரால் இனக்கொலை செய்யப்பட்டவர்கள் இந்த இன மக்கள். ஆனா இந்த மக்கள் பத்தின வரலாறு அதிகம் பேசப்படல எழுதப்படல. இதுக்கு என்ன காரணம்னா இவங்க சமுதாயத்துல ஒடுக்கப்பட்ட்ட ஓரங்கட்டப்பட்ட இனம் அப்டிங்கிறதால தான்.

11ம் நூற்றாண்டில் பஞ்சாப்ல ஆரியர்களுக்கும் இஸ்லாமியப் படையெடுப்பாளர்களுக்கும் இடையிலான அதிகாரப் போட்டியினால் இந்தியாவிலிருந்து இடம்பெயர்ந்தவர்களே இந்த ஜிப்ஸி இன மக்கள்.
இவர்களோடு தாய்மொழி என்ன என்று ஆராய்கையில் பஞ்சாபி மொழியும் ஹிந்தியும் சமஸ்கிருதமும் கலந்த, ஐரோப்பிய மொழிகளும் பெர்சிய இலக்கணமும் செரிந்த மொழி என்பதனை ஆய்வுகள் மூலம் நாம் அறிய முடிகிறது.

இந்தியாவிலிருந்து அகதிகளாக மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்குள் பரவிய அவர்கள் 'அழுக்கானவர்கள்' எனும் காரணத்தினால் ரஸ்ய அதிபரான ஸ்டாலினாலும், கிழக்கு ஐரோப்பிய கம்யூனிஸ நாடுகளின் ஆட்சியாளர்களாலும் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டனர். அதோடு, பாசிச காலகட்டத்தில் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் நாசிகளால் கொல்லப்பட்டார்கள். இனியும் இங்க இருந்தா மிச்ச மீதி இருக்கவங்களையும் கொன்றுவாங்கனு ஜிப்ஸி மக்கள் அகதிகளாக உலகெங்கும் உயிர் தப்பிச் சென்றார்கள்.

இருந்தாலும் அகதிகளா வந்த அவர்களுக்கு மேற்கத்திய அரசுகள் அடைக்கலம் தர மறுத்து விரட்டியடித்தன. ‘மனிதக் கழிவுகள் ஜிப்ஸிகள்’ என ஐரோப்பியப் பத்திரிக்கைகள் எழுதின. இதன் காரணமா இவர்கள் பிச்சை எடுக்க வேண்டிய நிலைக்கு ஆளானாங்க, ஆளாக்கப்பட்டாங்க. அதோட இந்த மக்கள், கல்வியறிவு இல்லாதவங்க. ஆனா அப்படி சொல்றத விட கல்வி மறுக்கப்பட்டவங்கனு தான் சொல்லணும்.

எகிப்திலிருந்து ஐரோப்பாவுக்குள் பரவிய கறுப்பு மக்கள் எனும் நம்பிக்கையில் ஐரோப்பியர்கள் ரோமா இன மக்களை ‘சிறிய எகிப்தியர்கள்’ என்ற அர்த்தம் தரும் வகையில் ஜிப்ஸிகள்னு அழைக்கத் துவங்கினர். தங்களோட வரலாறு குறித்து ஏதும் அறியாத ரோமா மக்கள் ஆரம்பத்தில் அதனையே தங்களோட அடையாளமாகவும் நெனச்சிக்கிட்டாங்க.

ஐரோப்பாவில் ஜிப்ஸி மக்கள் குறித்து பல அவநம்பிக்கைக் கதைகள் உண்டு. சாத்தானுக்கும் ரோமா இனப்பெண் ஒருவருக்கும் ஜனித்த இனம் ரோமா இனம் அப்டினும், இயேசு கிறிஸ்துவின் சிலுவையேற்றத்திற்குத் தேவையான ஆணிகளை ஜிப்ஸிகள்தான் உருவாக்கிக் கொடுத்தார்கள் என்றும் ஒரு நம்பிக்கை உண்டு. இயேசு கிறிஸ்து சிலுவையேற்றத்தின்போது சிலுவையில் அறையப்பட்ட ஆணிகளை ஜிப்ஸிகள் திருடிச்சென்றதால், இயேசு கிறிஸ்து வலியிலிருந்து தப்பினார்னு வேறொரு கதையும் உண்டு. இதுக்கு ஏத்தது போலவே ஜிப்ஸிகள் பாரம்பரியமாக தச்சுத் தொழலாளர்களாகவும் குறிசொல்பவர்களாகவும் நாடோடிகளாகவும் இருந்தது இந்த நம்பிக்கைகளுக்குத் தோதாக அமைந்துவிட்டது.

ஜிப்ஸிகளின் மீதான அவநம்பிக்கைக் கதைகளின் அடிப்படையில் 1721ஆம் ஆண்டு ஜெர்மனியை ஆண்ட நான்காவது கார்ல் மன்னன் சட்டப்படி, ஜிப்ஸிகளைக் கொள்வது கிறிஸ்தவர்களின் கடமை என ஆணை பிறப்பித்ததா வரலாற்று குறிப்புகள் சொல்லுது. 14ம் நூற்றாண்டிலிருந்து 19ம் நூற்றாண்டு வரையிலும் ரோமா இன மக்கள் ஐரோப்பாவில் அடிமை முறைக்கு ஆட்ப்பட்டனர்.

இருப்பினும், 1 கோடியே 20 இலட்சம் ஜிப்ஸி இனத்தவர் உலகெங்கும் சிதறியிருப்பதாக கருத்துக்கணிப்புகள் குறிப்பிடுது.

அதோட இந்த ஜிப்ஸி இன மக்களை அடிப்படையாக கொண்டு ஒரு படம் எடுக்கப்பட்டு அது பல விருதுகளையும் வாங்கிருக்கு. அந்த வகையில் ஒரு உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் அமைந்தது ‘தி டைம்ஸ் ஆப் தி ஜிப்ஸிஸ்’ அப்படிங்கிற படம். ஸெர்பியாவிலிருந்து அமெரிக்காவுக்கு நூற்றுக்கணக்கான ஜிப்ஸி சிறுவர்கள் கடத்தப்படுவது அவர்களை உலகெங்கிலும் பிச்சையெடுக்கவைப்பது பற்றியதாக இந்தப்படம் இருந்த போதிலும் ஜிப்ஸி மக்களின் வரலாறு கடந்த துயரத்தினையும், அவர்களது பெண்களும் குழந்தைகளும் வெள்ளையர்களால் சுரண்டப்படுவது பற்றியுமான கடுமையான விமர்சனத்தை இப்படம் கொண்டிருந்தது. அதோடு ஜிப்ஸி மக்களின் கூட்டு வாழ்வு, வாழ்க்கை நிலை, காதல், நடனம், இசை போன்றவற்றை தத்ரூபமாக உள்வாங்கியதாக இந்தப்படம் இருந்தது. பிரான்ஸில் கேன் திரைப்பட விழாவில் விருதுகளையும் அள்ளிய இப்படம் ஜிப்ஸி மக்கள் குறித்த மிகமக்கியமானதொரு திரைப்பதிவா இன்றளவும் இருக்கு.

இதை மாதிரி இன்னும் பல அதிர்ச்சிகரமான நெஞ்சை உலுக்கும் கதைகளும் இந்த இன மக்களிடம் இருக்கு. இவங்க எல்லா நாடுகளிலும் புறக்கணிக்கப்படுவதுக்கு முக்கிய காரணம் என்னனா இவர்கள், குறிப்பாக இந்தியத் தலித் மக்களின் சந்ததிகள் என்று ஆய்வுகள் தெரிவிப்பது தான்னு சில குறிப்புகள் பாக்கப்படுது.

இதை பற்றிய உங்கள் கருத்துக்களை பதிவிடலாமே...

Friday, January 4, 2019

திருவாரூர் இடைத்தேர்தலில் TTVக்கு தான் வெற்றி - கருத்துக்கணிப்பு முடிவுகள்


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு, தமிழக அரசியல் களத்துல பல சர்ச்சைகளும் திருப்பங்களும் இடைவிடாமல் நடந்துகிட்டு தான் இருக்கு. சசிகலா முதல்வர் ஆக போறாங்கன்னு எல்லாம் முடிவு ஆகி கடைசி நிமிடத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலுக்கு போய்ட்டாங்க. அதுக்கப்புறமா பல சம்பவங்கள் நடந்து சென்னை ஆர்.கே நகர் தேர்தல்ல டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். 

இப்படி இருக்கும்போது இந்த மாத கடைசியில வர இருக்கும் திருவாரூர் இடைத்தேர்தலில் தினகரன் தான் வெற்றி பெருவாருன்னு கருத்துக்கணிப்பு தகவல் வெளியாகியிருக்கு.

திருவாரூர் தொகுதிக்கு வரும் ஜனவரி 28ம் தேதி தேர்தல் நடைபெறும்ன்னும் ஓட்டுகள் 31ம் தேதி எண்ணப்படும்னும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதோட, கஜா புயலினால் திருவாரூர் அதிகப்படியா பாதிக்கப்பட்டுள்ளதாக காரணம் காட்டி அங்கு தேர்தலை ஒத்தி வைக்கும்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுக்கு போதிய உதவிகளை அரசு செய்யாததால் மக்கள் ஆளும் அதிமுக அரசு மீது கடும் கோபத்தில் இருக்காங்க. இந்த சந்தரப்பத்தை பயன்படுத்திக்கொண்ட தினகரன், அவ்வப்போது மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு உதவிகள் செய்தும், ஆறுதல்களை கூறியும் வருகிறார். இதனால் மக்களுக்கு தினகரன் மீது நம்பிக்கை உண்டாகியிருக்குறதாவும் சொல்லப்படுது. அது இந்த கருத்துக்கணிப்பின் முடிவில் உறுதியாகுறதாவும் கருத்துக்கள் பார்க்கப்படுது.

இந்த கருத்துக்கணிப்பால் அதிமுக, திமுக தரப்பு மிகப்பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துருக்காங்க. 

அதோட இந்த தேர்தல்ல நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும்னு அந்த கட்சியோட ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவிச்சிருக்காரு.

இதை பற்றிய உங்களுடைய கருத்துக்களையும் பகிரலாமே...

Thursday, January 3, 2019

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரின் மனைவி யார் தெரியுமா? The Legend Saravana Store owner's Wife


சென்னையின் மிக பிரபலமான சரவணா ஸ்டோர்ஸ் போலவே அதன் உரிமையாளரும் மிக பிரபலம் எனலாம். அவருடைய கடையின் விளம்பரத்தில் அவரே நடித்தது மட்டுமல்லாமல் பல முன்னணி கதாநாயகிகளுடன் ஜோடி சேர்ந்து நடித்ததன் மூலம் மிக அதிகமான விமர்சனத்துக்குள்ளானார்.

இந்நிலையில் சரவணா ஸ்டோர்ஸ் ஓனரின் மனைவியின் புகைப்படம் முதல் முறையாக சமூக வளையதளங்களில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

விளம்பரங்களின் மூலம் பிரபலமான சிலரில் மிக முக்கியமான ஒருவர் தான் சரவணா ஸ்டோர் உரிமையாளர் தி லெஜெண்ட் சரவணா ஸ்டார் நிறுவனத்தின் உரிமையாளர் சரவணன்.

இதோ அந்த புகைப்படங்கள் உங்களுக்காக...







Tuesday, January 1, 2019

ஆஸ்திரேலிய அணியின் தேர்வு குழுவை மோசமாக கலாய்த்த கங்குலி

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வறாங்க. இவ்விரு அணிகள் இடையே நடைபெறும் டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா பின்னடைவை சந்தித்துள்ளது. அதோடு அணி தேர்ந்தேடுப்பதும் மிக மோசமாக இருப்பதா பல குரல்கள் எழுந்து வருது. இப்படி இருக்கும்போது இதை சுட்டிக்காட்டி கடைசி டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி குறித்து முன்னாள் இந்திய கேப்டன் கங்குலி விமர்சனம் பண்ணிருக்காரு. இது இப்போ சமூக வலைத்தளங்களில் வைரலா பரவிட்டு இருக்கு.

ஏற்கனவே பின்தங்கியுள்ள ஆஸ்திரேலியா அணி இந்தத் தொடரை சமன் செய்வதற்காக அடுத்து போட்டியை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கு. அதோட அணியில் சில மாற்றங்களை செய்ய வேண்டும்னு பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் மற்றும் ஸ்டீவ் வாக் ஆகியோர் கூட கடைசி டெஸ்ட் போட்டிக்கு தாங்கள் விரும்பும் பதினோரு பேர் கொண்ட அணியை தங்களது சமூக வலைத்தளங்களில் தெரிவிச்சிருக்காங்க.

இதை குறிப்பிட்டு ட்விட்டரில் எழுதிய முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி, "ஆஸ்திரேலிய கிரிக்கெட் தேர்வு குழுவின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கு. முன்னாள் ஜாம்பவன்கள், ஆட்ட லெவன் குறித்து தங்களது சமூக வலைத்தளங்களில் பக்கம் மூலம் தேர்வுக்குழுவுக்கு உதவ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுனு எழுதிருக்காரு.

இந்த பதிவுக்கு ஏகப்பட்ட பேர் விருப்பம் தெரிவிச்சி வராங்க. இருந்தாலும் இந்திய அணி மிக சிறப்பா விளையாடி வராங்க அதே நேரத்துல சில முக்கிய வீரர்கள் ஆஸ்திரேலிய அணியில் இப்போ விளையாடாததும், ஆடும் சில முக்கிய வீரர்களும் ஜொலிக்காத காரணத்தினால் தான் இந்த நிலைமைனு கருத்து பதிவிட்டு வராங்க.

அதே போல, இப்போ இருக்க இந்திய அணி உலகில் எந்த அணியுடன் விளையாண்டாலும் கண்டிப்பா ஜெயிக்கும் அளவுக்கு விளையாடி வருவதாவும் பதிவிடுறாங்க. உங்க கருத்துக்களையும் பதியலாமே...