Monday, July 23, 2018

மொழி தெரியாதவரை குறிவைக்கும் கொள்ளை கும்பல்... உஷார் பதிவு...

மொழி என்பது நம் எண்ணங்களையும் கருத்துகளையும் பரிமாறிக்கொள்ளத் தானே அன்று, அதை வைத்து பேதம் பிரிக்கவோ, வேறு பல தேவையற்ற செயல்களுக்கோ இல்லை என்பதை நாம் அறிவோம். இருப்பினும் அந்த மொழியை வைத்து பல எண்ணற்ற வகையில் ஏமாற்றிக்கொண்டிருக்கும் கூட்டமும் உண்டு (அரசியலுக்கு அப்பாற்பட்டு). நான் சமீபத்தில் என் பணிக்காக பெங்களூர் வந்தேன். மொழி தெரியா இடத்தில் நான் சந்தித்த சில இன்னல்களையும் முந்தைய பதிவில் வெளிப்படுத்தியிருந்தேன். இருப்பினும் இவ்வாறு மொழி தெரியா இடங்களில் சிக்கிக்கொண்டு ஏகப்பட்ட ஏமாற்றங்களை சந்திக்கும் மக்கள் நம்மில் பலர் உள்ளனர். அப்படி நான் சமீபத்தில் தெரிந்துகொண்ட நிகழ்வு என்னை மிகவும் சிந்திக்க வைத்துவிட்டது.
என் நெருங்கிய நண்பரின் நண்பர் ஒருவர் (அருண்), தமிழ்நாட்டில் இருந்து பெங்களூர் வருகிறார். அவருக்கு தமிழும் ஆங்கிலமும் தான் தெரியும்.  எலக்ட்ரானிக் சிட்டியில் பணிபுரியும் அந்த நண்பர் தூக்க கலக்கத்தில் சரியான இடத்தில் இறங்க தவறி, சிறிது அதாவது அவர் இறங்க வேண்டிய இடத்திலிருந்து 2-3 கி.மீ தூரம் தள்ளி இறங்குகிறார். அப்பொழுது அதிகாலை 4 மணி இருக்கும். அந்நேரத்தில் பேருந்து வசதியும் இல்லை. எந்நேரமும் உதவி செய்ய தயாராக காத்திருக்கும் கூகுள் நண்பரின் உதவியுடன் தான் சென்றடைய வேண்டிய தூரம் 2கி.மீ தூரத்தில் உள்ளது என்பதை அறிந்து கொண்டு ஆட்டோவில் சென்று விடலாம் என்று முடிவு செய்து ஆட்டோவை அழைக்கிறார் அருண். ஆட்டோவில் அந்த ஆட்டோ ஓட்டுனரின் நண்பரும் இருக்கிறார். ஆட்டோ ஓட்டுநர் அதிகாலை நேரம் என்பதால் மீட்டர் காண்பிக்கும் தொகையின் இரண்டு மடங்கு தர வேண்டும் என்று கேட்க, இரண்டு கி.மீ தானே என்று ஒப்புக்கொண்டு தன் பயணத்தை தொடர்கிறார் அருண். ஆட்டோ ஓட்டுநர் சந்து சந்தாக ஓட்டிச் செல்லவே அருணுக்கு சந்தேகம் வளுக்கிறது. ஆட்டோ ஓட்டுனரிடம் கேட்க, அவரோ முன்னுக்கு பின் முரணாக பதில் கூறுவதை உணர்ந்து தான் இறங்கிக்கொள்வதாக கூறுகிறார். இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது, தான் பயணித்து வந்த 10 நிமிட தூரத்திற்கு 4 கி.மீ பயணித்ததாய் மீட்டர் பெட்டி காட்டுகிறது. அருணோ கூகுள் அண்ணாச்சியின் உதவியால் ஆட்டோ ஓட்டுனரின் சதியை புரிந்துகொள்ள முற்படுகிறார். இறங்குவதாய் கூறியதும் இரவு நேரம் இரண்டு மடங்கு பணம் என்றும், 350+350 தரவேண்டும் என மிரட்டுவதை போல் உணர்ந்த அருண், அதிகாலை வேளையிலே மொழி புரியா ஊரிலே வேறு வழியின்றி அவர்கள் கேட்ட தொகையை (1*500, 2*100ரூ) கொடுத்து வேக வேகமாக நடக்க தொடங்கினார். சிறுது தூரம் சென்றதும் அந்த ஆட்டோவில் இருந்த ஓட்டுனரின் நண்பர் இவரை பின் தொடர்ந்து வேகமாக வருவதை உணர்ந்து என்ன என்று கேட்டார், அதற்கு, நீங்கள் 500 ரூ என்று நினைத்து 50ரூ கொடுத்துள்ளீர்கள் பாருங்க என்று கூறி 50 ரூ நோட்டை நீட்டினார். இவரும் முடிந்தவரை வாக்குவாதம் செய்து வேறு வழியின்றி இன்னொரு 500 ரூபாயை கொடுத்துவிட்டு இந்த 50 ரூபாயை வாங்கி வைத்துக்கொண்டு நடந்தார். இதை அவர் சொல்ல கேட்கும்பொழுது சற்று நகைச்சுவையாகத் தான் தோன்றியது. எளிதில் பலரை நம்பி ஏமாறும் என்னால் கூட இவர் சொன்ன நிகழ்வை நம்ப முடியவில்லை. அவர் வார்த்தைகளின் தடுமாற்றமும், தொண்டையின் அவ்வப்போது அடைப்பும், வெளியே வரலாமா வேண்டாமா என கட்டளைக்காய் காத்திருக்கும் கண்ணீரும் தான் அவரின் வேதனை வெளிப்படுத்தியது. பாவம், மொழி தெரியலனு இப்புடிலாமா ஏமாத்துவாங்கனு தோணுச்சு. ஒரு முறை ஆட்டோவில் என் பர்ஸை தொலைத்துவிட்டு வீடு வந்து சோகத்தில் அமர்ந்திருந்தேன். சரியாக 10 நிமிடத்திற்குள் என் பர்ஸை அந்த ஆட்டோ ஓட்டுநரே என் வீட்டில் வந்து கொடுத்துவிட்டு பர்சலாம் இப்புடி அசால்ட்டா வைக்காத தம்பி னு சொல்லி, நன்றி கூறி நான் குடுத்த காசையும் வாங்க மறுத்து, ஆட்டோ காச தான் அப்பயே குடுத்துட்டயேப்பா ன்னு சொன்ன ஆட்டோக்கார அண்ணன்களை பாத்த எனக்கு சத்தியமா இது ரொம்ப கேவலமா தெரிஞ்சிது. இப்போ நமக்கு தெரிஞ்சி இவரு ஏமாந்திருக்காரு, ஆனா நமக்கு தெரியாம எவ்ளோ பேரு எப்புடி எப்புடியோ ஏமாந்துருப்பாங்க. அருண் வயிறு எறிஞ்சி கொடுத்த அந்த காசு கண்டிப்பா அந்த ஆட்டோ ஓட்டுனருக்கு நல்லது பண்ணிருக்காது. இப்படியெல்லாம் வசனம் பேசுனாலும், மொழி தெரியல அதனால இவனை சுலபமா ஏமாத்திடலாம் னு எண்ணம் வர என்ன காரணம் அப்டிங்குறது தான் முக்கியம்னு எனக்கு தோணுது. இதே செயலை கண்டிப்பா அந்த ஊரு காரங்க கிட்ட அவனால பண்ண முடியாது. இப்படிப்பட்ட பிரிவினைக்கு பின்னாடியும் ஒரு பெரிய அரசியல் இருப்பதை உணர முடிகிறது. என்ன இருந்தாலும் மனிதர்களாகிய நம்மை மீறி அரசியல் ஒன்றும் செய்திட முடியாது என பல இடத்தில் நாம் உணர்ந்திருக்கிறோம். இருப்பினும் இவ்வாறான சூழ்நிலைகளில் மனிதநேயம் என்பது அறவே இல்லாமல் போவது தான் வேதனை.

Friday, July 20, 2018

ஆழமான அற்புதங்களை கொண்ட கடைக்குட்டி சிங்கம்

பாண்டிராஜ் என்ற ஒற்றை பெயருக்காகத்தான் உண்மையாக படத்திற்கு சென்றேன்... ஆனால் வெளியில் வரும்பொழுது அப்படி ஒரு ஆனந்தம், மனநிறைவு... இமானின் இசையில் நனைய துவங்கியதிலிருந்து, மூன்று தேவதைகளின் அழகில் மெய்சிலிர்த்து, அழகான ஆழமான பாசப் பொழிவில் கண்ணீரை மறைத்திட முடியவில்லை... கார்த்தி கடைக்குட்டி சிங்கமாக வாழ்ந்திருக்கிறார். பாசம், வீரம், காதல், உரிமை, சொந்தம் என அத்தனையும் அம்சம்... சூரியின் துணையின்றி சிறப்புற செய்திருக்க வாய்ப்பில்லை எனலாம்... பல தருணங்களில் ஏன் கிட்டத்தட்ட ஒவ்வொரு காட்சியிலும், கார்த்தியின் நிலையில் என் தனிப்பட்ட நிலையை கச்சிதமாக பொருத்தி பார்க்க முடிகிறது... சுற்றி எங்கு பார்த்தாலும் அக்கா, அக்கா மகள்கள் என பல காட்சிகளிலும் சூழல்களிலும் என் நிலையை பார்த்தது போலவே தெரிந்தது... காதாநாயகிகளாக 3 தேவதைகள், ஜாடிக்கேத்த மூடியாய்... #கார்த்தி #பாண்டிராஜ் #இமான் #சூரி... இந்த கூட்டணிக்கு மிக்க நன்றி... தமிழ் படத்திற்கு சீட்டு கிடைக்காததால் இப்படத்திற்கு சென்று, தமிழ் பாரம்பரியத்தில் வாழ்ந்த நிறைவோடு வெளியே வந்தேன்... ஒவ்வொரு காதாபாத்திரமும் அவ்வளவு ஆழம்... தாய்மாமன் ஒவ்வொருவனும் தன் அக்கா மகளை தன் மகளாய் தான் வளர்க்கின்றனர் என்ற கருத்துக்கு
This story may feel too much for few, but it personally connected with me a lot...

Tuesday, July 10, 2018

முதல் நாள் இன்று...


நெய்வேலியில் இரவு 12 மணியளவில் துவங்கிய பேருந்தில் தொடங்கியது பெங்களூரை நோக்கிய என் முதல் பயணம்... ஸ்லீப்பர் கடைசி பெர்த்தில் அமைந்தது என் இருக்கை (படுக்கை)... ஆடி குலுங்கி அல்லோலப்பட்டு அரைத்தூக்கத்தில் நான் இருக்க, மடிவாளா கடைசி ஸ்டாப் எல்லாம் எறங்கிக்கோங்க என்ற குரல் ஒலித்ததும் அவசர அவசரமாக இறங்கினேன்... படியில் கால் வைத்து இறங்க முற்படுகையில் அவ்வளவு வரவேற்பு... ஆட்டோக்கார அண்ணன்கள்... என்னை அழைத்து செல்ல ஆனந்த் வந்து கொண்டிருக்கிறான், சென்னைக்கு மிக மிக அருகில் என்று சொல்வதை போன்ற வெகு தூர இடத்தில் இருந்து... கீழிறங்கியதும் முதல் அதிர்ச்சி, ஜியோ செயலிழந்துள்ளது. அதில் மட்டும் தான் அழைக்கும் வசதியும் டேட்டா வசதியும் உள்ளது... என்ன செய்வதென்று புரியவில்லை... மெதுமெதுவாக நடந்தேன், ரோட்டுல போறவன வளுக்காட்டாயமா இழுத்து உள்ள போட்டுடுவாங்க போல அந்த அளவுக்கு இருந்துச்சு ஆட்டோக்கார அண்ணன்கள் அழைப்பு... அப்பப்போ நண்பர் Seshadry சொன்ன வார்த்தைகள் வந்து வந்து போகும், டேய் மறந்து கூட ஆட்டோல ஏறிடாத அவ்ளோ தான்னு... இப்போ தான் புரிஞ்சிது ஏன் அப்புடி சொன்னான்னு... சரினு தயக்கத்துடன் 25 வயது மதிக்கத்தக்க ஒரு நண்பரிடம் சென்று விடயத்தை கூறி கைபேசியை கேட்டேன்... எல்லா கதையையும் கேட்டு சரி சரி என்று சொல்லி விட்டு, கையில் இருந்த கைபேசியை பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டு நடக்க தொடங்கினார்... சிறிது தூரம் நடந்து இன்னொருவரிடம் கேட்டு நண்பன் Anand க்கு அழைப்பு செய்தேன்... என் நேரம், ஆர்ப்பரிக்கும் அடைமழையில் சப்தம் கேட்கவில்லை போலும் இரு முறை முயற்சித்தேன், பயனில்லை... நன்றி கூறி நடந்தேன்... நேரம் என் இதய துடிப்பை விட வேகமாய் ஓடிக்கொண்டிருந்தது... கடவுள் செயலாய் ஒரு தமிழ் நண்பரை கண்டுகொண்டு என் நிலையை கூறினேன்... தான் சேலம் தான் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு தன் கைபேசியை கொடுத்தார், இருமுறை முயற்சித்தும் Anand அழைப்பை எடுக்கவில்லை, அந்த நண்பரே தான் இந்த எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி என்னை அழைக்க கூறுவதாக கூறினார். சரி என்று கொட்டும் மழைக்கு குடைபோல் விரிந்திருந்த மரத்தின் அடியில் அமர்ந்தேன்... நல்ல வேளையாக அமர்ந்தவுடன் பல மாதங்களாக பயன் படுத்தாமல் டம்மியாக வைத்திருந்த சிம்முக்கு Anand அழைத்தான், பெருமூச்சு விட்டுக்கொண்டு பேசினேன், நான் 5 மணிக்குலாம் கெளம்பிட்டேன் டா, 7.15 க்குலாம் மடிவாளா வந்துடுவேன் அங்கேயே இரு என்று சொன்னான்... சரி சரி டா நீ பொறுமையா வா ஒன்னும் அவசரம் இல்ல, ஆனா வீட்டுக்கு போன் பண்ணி நான் பெங்களூரு வந்துட்டேன்னு அம்மாட்ட சொல்லிடு னு சொல்லிட்டு என் காத்திருப்பை தொடர்ந்தேன்... நேரம் உறைய உறைய மழையின் வேகம் அதிகரித்தது... கொளுத்தி எடுத்த வெயிலுக்கு என்ன செய்வதென்று புரியாமல் இருந்த என்னை, அடை மழையோடும் கடுங்குளிரோடும் வரவேற்றது பெங்களூர்... ஒரு வழியா Anand வந்தடைந்தான். ஒரு 200 அடி தொலைவில் இருந்தும் ஒருவரை ஒருவர் சென்றடைய கிட்டத்தட்ட அரை மணிநேரம் ஆனது... அவன் சொல்ற இடம் ஒன்னு கூட என் கண்ணுல படல, அப்றம் தான் கண்டு பிடிச்சோம் இருவரும் வெவ்வேறு திசையில் இருக்கிறோம் என்று...அது ஒரு பெருங்கூத்து...
எப்படியோ தேடி கண்டுபிடிச்சி ஹோட்டல் க்கு சென்றடைந்தோம்...