பொங்கல்... தமிழனாய் பிறந்த ஒவ்வொருவனும் இந்த நாளை நினைத்தாலே உள்ளுக்குள்ள ஒரு உற்சாகம் இருக்கும்... ஸ்கூல் பசங்களுக்கு தொடர்ச்சியா 4-5 நாள் லீவ், காலேஜ் பசங்களுக்கு தங்களோட குடும்பத்தோடயும் ஸ்கூல் நண்பர்கள், ஊர் பசங்கன்னு எல்லாரையும் ஒன்னா பாக்கலாம்னு ஒரு சந்தோசம், வயசானவங்களுக்கு வெளியூர்ல வேலை செய்யிற தங்களோட பசங்களையும் பேர பசங்களையும் பாக்க போறோம் என்ற சந்தோஷம்... இது மாதிரி ஒவ்வொரு கால கட்டத்துல இருக்கவங்களுக்கும் ஒரு விதமான சந்தோசத்தை கொடுத்து மகிழ்ச்சியை பொங்க வைக்குற நாள் தான் நம்ம பொங்கல்...
என்ன தான் காலைல 6 மணிக்கு அலாரம் வச்சாலும் அம்மா எழுந்திரு எழுந்திரு சொல்லி அரை மணிநேரம் கழிச்சி பொலம்பிகிட்டே எழுந்தா கொறஞ்சது 7 30 மணியாவது இருக்கும்... அம்மா வீட்டலாம் கழுவி விட்டு, சாமி படங்களலாம் தொடச்சி பூ போட்டு வச்சி சாமியரையை அலங்கறிச்சிறுபாங்க...
சுடுதண்ணி கொதிக்கிது எவ்ளோ நேரம் தான் தூங்குவ... எழுந்திருன்னு அம்மா கத்த ஆரம்பிக்கும்போதே சுதாரிசிக்கிட்டு எழுந்துடனும் இல்லனா அவ்ளோ தான்... சரி போய் அந்த எண்ணெயை எடுத்துட்டு வா தேச்சு விடறேன்னு அம்மா சொல்லும்போது தான் ஞாபகத்துக்கு வரும், நேத்து நைட்டே அவ்ளோ சொன்னாங்க எண்ணெய் வாங்கிட்டு வந்து வைன்னு ஆனா வாங்கலனு... அதுக்கு வேற திட்டு விழும்னு அவசர அவசரமா வண்டிய எடுத்துட்டு போய் கடையில எண்ணெய் வாங்கி அப்டியே கடைக்கார அண்ணனுக்கு பொங்கல் வாழ்த்துக்கள் சொல்லிட்டு வீட்டிக்கு பறந்து வரணும்...
நம்ம வீட்ல சும்மா இருந்தாலும் அக்கம்பக்கத்துல இருக்க பொடிசுங்களாள தான் நமக்கு அதிக டோஸ் கிடைக்கும்... பாரு குட்டி பசங்க காலைல எழுந்து குளிச்சி புது ட்ரஸ் போட்டு எவ்ளோ அழகா வெடி வெடிக்குதுங்க... உனக்கும் தான் 7 கழுதை வயசு ஆகுது இன்னும் சோம்பேறித்தனம் னு... அப்போ தான் செம்ம காண்டாவும்... என் தூக்கத்தை கெடுத்ததே அதுங்க போட்ட வெடியாள தான்... நம்ம தெருவுல ஒரு 6-7 குட்டிசுங்க இருக்குங்க... தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான், கார்த்திகை தீபம் னு எது வந்தாலும் வெடி தான்... ஆனா நான் ஸ்கூல் முடிக்கும்போதே அதுங்க குட்டிசுங்களா தான் இருந்துச்சிங்க ... சரி குழந்தைங்க, வளர வளர சரி ஆகிடும்னு பாத்தா இப்போ நான் வேலைக்கு போய் 3 வருஷம் ஆகுது (ஸ்கூல் முடிச்சி ஏறக்குறைய 9 வருஷங்கள் ஆகிடிச்சி) இன்னும் வெடி வெடிக்குற பழக்கம் மட்டும் மாறல...😭😭😭
சரினு அம்மா எண்ணெய் தேய்க்க ஆரமிச்சங்கனா அப்டியே உடம்பில இருந்து ஆவியா பறக்கும்... அதுக்கும் திட்டு தான்... பாரு எண்ணெய் தேச்சு குளினு சொன்னா எங்க கேக்குற... இப்போ பாரு எவ்ளோ சூடு உடம்புலனு... அது கூட பரவால்ல... தலையில எண்ணெய் தேய்க்கும்போது தான் உயிரே போய்டும்... வலியால இல்ல... முடியால...ஆனா எனக்கு தெரிஞ்சி கடந்த 7 வருஷமா ஒரே வசனம் தான் சொல்லிட்டு இருப்பேன்... நீ இப்புடி தேச்சினா அடுத்து வருஷம் தேய்க்கிறதுக்கு மண்டைல முடி இருக்காது னு... நல்ல வேல இந்த வருஷமும் அந்த வசனம் சொல்றதுக்கு முடி இருக்கு... ஹா ஹா ஹா...
குளிச்சு முடிச்சி வந்தா சொர்கமா தூக்கம் வரும், ஆனா நம்ம பசங்க வந்துடுவாங்க, வேட்டி சட்டையை போட்டுக்கிட்டு ஊர் சுத்த கெளம்பிடுவேன்... பல பண்டிகையை கொண்டாடுனாலும் பொங்கள்னா தனி தான்...
இதுல சில விஷயங்களை ஒவ்வொரு வருஷமும் கொஞ்சம் கொஞ்சமா இழந்துகிட்டே வந்தேன், ஆனா இந்த வருஷம் மொத்தமும் போனதாய் உணர்கிறேன்... ஏன்னா பொங்கலுக்கு ஊருக்கே போக முடியல... பணி நிமித்தமாக... இப்போதான் அம்மாவை ரொம்பவே மிஸ் பன்றேன்... கூட இருக்கும்போது பெருசா வெளிப்படுத்திக்கல, அதற்கான அவசியமும் வந்ததாய் தோனல... ஆனா இப்போ... வெளிப்படுத்த முடியாமல் பொலம்பிக்கொண்டிக்கிருக்கிறேன்...
உன்னை இப்போ பாக்கணும்😥😥...
இதை எழுத தொடங்கும்போது கண்டெண்ட் (content) மட்டும் தான் இருந்தது, எங்க ஆரமிக்கணும், எதெல்லாம் குறிப்பிடனும், எப்புடிலாம் எழுதனும்னு ஆனா இப்போ முடிக்கிற நேரத்துல என்னையறியாம கண்ணீர்... (அட இது நம்ம ஸ்கிரிப்ட்லே இல்லையே)...
தாயால் வளர்க்கப்பட்டு சகோதரிகளின் செல்ல தம்பியாய் வளர்ந்த என்னை போன்றவர்கள் தங்களின் வாழ்வில் சந்திக்கும் மிகப்பெரும் வலி, அடி இதைவிட வேறு என்ன இருந்திட முடியும்... #பாசம்...
குடும்பத்துடன் நான் இருந்திடாத முதல் மற்றும் கடைசி பொங்கல் இதுவாகவே இருக்கவேண்டும் என்ற தீர்க்க முடிவை எடுத்துள்ளேன்...
இருப்பினும் இந்த பொங்கலுக்கு ஊருக்கு வரவில்லை என்றதும் சில நண்பர்கள் விளையாட்டாய் கூறிய சில வார்த்தைகள் என்னை ஆழமாய் பாதித்துள்ளது... பொங்கலுக்கு லீவ் இல்லன்னு யாராவது சொல்லுவாங்களா... அப்படி சொன்னா என்ன LOP (Loss of pay)ல வரலாமே என்று... இங்க ஒரு சின்ன தெளிவு குடுக்கணும்னு நெனைக்கிறேன், நான் பொங்கலுக்கு வராதது பணி நிமித்தமாக மட்டுமே தவிர பண நிமித்தமாக இல்லை. தமிழுக்காய் வேலை செய்யும் 8 பேர் கொண்ட தமிழர்களின் அணிக்கு, தமிழர் திருநாளாம் பொங்கல் அன்று விடுமுறை இல்லை என்பது வெட்கி தலை குனிய வேண்டிய செயலாகவே பார்க்கிறேன்... அவன் அவனுக்கு வந்தா தான தெரியும்... இதை அவர்கள் பார்த்தாலும், என்ன இதுக்குலாம் இவ்ளோ பொங்குறான், ஹி இஸ் ஜஸ்ட் பர்ஸ்டிங் அவுட் ஆஃப் இமோஷன்னு தான் நெனைப்பங்க... ஆனா பொங்கல் இஸ் அக்ச்சுவலி அன் இமோஷன்னு அவங்களுக்கு புரியுமானு தெரியல... நாம கொண்டாடாத, என்னவென்று அர்த்தம் கூட தெரியாத வடஇந்திய பண்டிகைக்கெல்லாம் விடுமுறை உண்டு... தமிழர்கள் தானே என்ற அவர்களின் எண்ணம் இவர்களுக்கும் வந்துவிட்டதோ என்றே எண்ணத்தோன்றுகிறது...
முதல் முறையாய் பொங்கலுக்கு அம்மாவுடன் இல்லாததை எண்ணி குமுறுகிறேன்... வேற என்ன பண்றது குரங்குக்கு வாக்கப்பட்டா மரத்துக்கு மரம் தாவி தான ஆகணும்...
இதுக்கு இன்னொரு காரணமும் சொல்லலாம், நான் பெங்களூர்ல இருக்கேன்... என்ன தான் சிங்கம் காட்டுக்கே ராஜாவா இருந்தாலும், அதோட குகைல இருந்தா தான அதுக்கு பெருமை...
குடும்பத்தோடு இத்திருநாளை இனிதே கொண்டாடும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள், சந்தோசம் பொங்கட்டும்...
என் உணர்வுகளுக்கு வார்த்தைகள் மூலம் உயிர்கொடுத்த தமிழ் மொழிக்கு நன்றி... 🙏🙏🙏